மனித மனதினைக் குரங்கோடு ஒப்பிடுவது வழக்கம். கடல் அலை கூட ஓய்ந்து விடும். ஆனால் மனமோ ஓயவே ஓயாது. என் மனம் செய்யும் தொல்லைகள் கொஞ்சமா நஞ்சமா? எதைச் செய்து கொண்டிருந்தாலும் மனதின் பின்னணியில் ஒரு திரைப்படம் ஓடிக்கொண்டே இருக்கும். "நான் அன்று மட்டும் அவ்வாறு செய்திருந்தால் இன்று இந்த நிலை வந்திருக்காதே..","நான் எடுக்கும் முடிவுகள் சரியா? தவறா?" அல்லது " ஐந்து வருடங்கள் கழித்து என் வாழ்க்கை எப்படி இருக்கும்?" - இம்மூன்று எண்ணங்கள் தான் மாறி மாறி வந்துக்கொண்டே இருக்கும். இப்படியே நான் எதிர்காலச் சிந்தனையில் நிகழ்காலதைத் தொலைக்கிறேன்.
உலகில் தற்பொழுது அனைத்துச் சுயமுன்னேற்ற எழுத்தாளர்கள் கூறும் சர்வரோகநிவாரணி "Follow your passion!". இந்த " What is my passion?" பூதம் என்னைப் படுத்தும் பாட்டை எழுத நூறு பக்கங்களுக்கு மேல் தேவைப்படும்! இந்தக் கேள்விக்கு நானும் பல வருடங்களாக பதில் தேடுகிறேன். பதில் தான் என்னைக்கண்டு பயந்து ஒளிந்துகொண்டதோ என்னவோ? புலப்படவே மாட்டேன் என்கிறது! ஏற்கனவே குழப்பத்தில் இருந்த என் மனம், இதையும் சேர்த்துக் கொண்டு, சேறு போல் குழம்பிவிட்டது! நான் சரியான பாதையில்தான் செல்கிறேனா? "Am I following my passion or not?" என்ற பயம் என்னைப்பிரியாமல் கூடவே வருகின்றது!
இத்தனை எண்ணங்களும் ஒருசேரத் தோன்றி என்னைத் திக்குமுக்காடச் செய்கின்றன! கடலில் அலைகள் எழுவதைப்போல் என் மனதில் சிந்தனைகள் எழும்புகின்றன. திசைக்கொன்றாய் புரவிகள் இழுத்தால் தடுமாறும் தேர் போல, நதிச்சுழலில் அகப்பட்டு தத்தளிக்கும் படகு போல என் மனம் சிந்தனைக் கடலில் அகப்பட்டு அவதிப்படுகிறது!
கிட்டுமோ அமைதி? தெளியுமா குழப்பம்?
No comments:
Post a Comment